கோவை: கோவையில் ஓடும் பேருந்தில் மயங்கி விழுந்த பெண்ணை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்த ஓட்டுனர், நடத்துனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
காந்திபுரத்தில் இருந்து சரவணம்பட்டி விசுவாசபுரத்திற்கு நேற்று ஒரு தனியார் பேருந்து புறப்பட்டது. அந்த பேருந்தில் அத்திப்பாளையத்தைச் சேர்ந்த மேரி(35) என்ற பெண் பயணம் செய்தார்.
பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மேரிக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்திலேயே அவர் மயங்கி சரிந்து விழுந்தார்.
இதனைப்பார்த்து சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே பேருந்தின் ஓட்டுனர் மணிகண்டன், நடத்துனர் தினேஷ் ஆகியோர் மேரியை மீட்டு அதே பேருந்தில் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து மேரியை மருத்துவ சிகிச்சைக்காக அனுமதித்து உறவினருக்கும் தகவல் அளித்தனர். உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதால் அந்த பெண் சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளார்.
தக்க நேரத்தில் பெண்ணுக்கு உதவிய பேருந்தின் ஓட்டுனர், நடத்துனருக்கு சக பயணிகளும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

