கோவை: மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு பெட்ரோல் பாட்டிலுடன் வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இன்று காலை 8 மணி அளவில் ஒரு வாலிபர் வந்தார். அவர் அணிந்து இருந்த துண்டு மற்றும் சட்டையில் ரத்தம் படிந்து இருந்தது.
அவர் கையில் 1/2லிட்டர் பாட்டிலில் பெட்ரோல் வைத்திருந்தார்.
அந்த வாலிபர் கையில் பெட்ரோல் உடன் உள்ளே வருவதைப் பார்த்த அங்கு காவலுக்கு நின்ற போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது அந்த வாலிபர் கையில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்ற முயன்றார். உடனே அதை பறித்த போலீசார் அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது அவர் தனது பெயர் முகமது யாசின் என்றும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சொந்த ஊர் என்றும் கூறினார்.
தற்போது பொள்ளாச்சியில் புரோட்டா கடையில் தங்கி வேலை பார்த்து வருவதாக கூறினார்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த முகமது சாலிக் என்பவரிடம் நிலம் வாங்குவதற்காக 4.5 லட்சம் பணத்தை கொடுத்ததாகவும் அதை திருப்பி கேட்ட போது அவர் தராமல் இழுத்தடித்ததாகவும் கூறினார்.
நேற்று பணம் கேட்டபோது முகமது சாலிக் மற்றும் 6 பேர் பொள்ளாச்சி அம்பராம்பாளையம் அருகே தன்னை அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கி தன்னிடம் இருந்த பணம் கடன் கொடுத்ததற்கான ஆவணங்களை பறித்துச் சென்றதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் செய்ததாகவும் ஆனால் தனது செல்போன் மற்றும் பொருட்களை போலீசார் பறித்துக் கொண்டு தன்னை அடித்து அனுப்பி விட்டதாகவும் கண்ணீருடன் கூறினார்.
இதனைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி நடந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று புகார் அளிக்கும்படி கூறினர்.
தொடர்ந்து அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்தார்.

