கோவை: கோவையில் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட பிறகு 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை சுல்தான்பேட்டை அருகே ஓடக்கல்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் மதிய உணவு உட்கொண்ட 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓடக்கல்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று மதிய உணவு வழங்கப்பட்டது. உணவைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மற்றும் கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சுல்தான்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுல்தான்பேட்டை அறம் மருத்துவமனையில் 12 மாணவர்களும், புருஷோத்தமன் மருத்துவமனையில் 6 மாணவர்களும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செஞ்சேரி மலை ராயல் கேர் மருத்துவமனையில் 13 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தகவலறிந்து சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சுல்தான்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உணவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

