கோவை: கோவை உக்கடத்தில் ரூ.245 கோடியில் 3ம் நிலை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கோவை உக்கடத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையம் தினசரி 70 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது.
உக்கடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் பாதாள சாக்கடை உள்ளிட்ட கழிவு நீர் இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது,
பின்னர் இது தொழிற்சாலைகள், கட்டுமானம், விவசாயம், பூங்காங்களுக்கு நீர்ப்பாய்ச்சல் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இந்த வளாகத்தில் தற்போது 3ம் நிலை நீர் சுத்திகரிப்பு (ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்) நிலையம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது 25 மில்லியன் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது.
இதன் மூலம் சுத்திகரிக்கப்படும் நீரை தொழிற்சாலை மற்றும் கட்டுமான பணிகளுக்கு வழங்க தீர்மானித்துள்ளது. இந்த புதிய திட்டத்தை ரூ.245 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மாநில அரசின் நிதி ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்படும். மேலும் இதன் தொடர்ச்சியாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு, குழாய்கள் மூலம் 3ம் நிலை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைக்கப்படும். பின்னர் இங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கட்டுமான பணி, தொழிற்சாலை தேவைக்காக விநியோகிக்கப்படும்.
மேலும் இந்த நிலையத்தில் தானியங்கி முறையில் நீரின் தரத்தை சோதிக்கும் கருவிகள் பொருத்தப்படும். சுத்திகரிக்கப்பட்ட நீரின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட பின்னரே விநியோகம் செய்யப்படும்” என்றனர்

