கோவை: கோவையில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஒரு இளைஞரை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் ஜப்பான் (எ) பிரவீன்குமார் (24வயது) மைசூருவில் தென்னை நார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி நாளில் ஏற்பட்ட தகராறில் கோகுல கிருஷ்ணன் என்ற வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பிரவீன் குமார் உள்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கில் ஜாமீனில் விடுதலையான பிரவீன்குமார் மீண்டும் மைசூருவில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கோவை வந்த பிரவீன்குமார், நண்பர்கள் சிலருடன் கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள முள்புதர் நிறைந்த பகுதியில் நேற்று இரவு 7 மது அருந்திக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரவீனை கல்லால் தாக்கியும் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பழிக்கு பழி தீர்ப்பதற்காக இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதா என்ற கோணத்தில் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

