தமிழர் உடை அணிந்து கோவையில் பொங்கல் பண்டிகை கொண்டாடிய பாஜக செயல் தலைவர்…

கோவை: கோவையில் தமிழரின் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் பண்டிகையை பாஜக தேசிய தலைவர் நித்தின் நபின் கொண்டாடினார்.

கோவை மாநகர மாவட்ட பாஜக சார்பில் வடவள்ளி பகுதியில் நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழரின் பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், அண்ணாமலை ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வடவள்ளி பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாஜக மகளிர் அணி சார்பில் 100 க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் வள்ளிக்கும்மி, சிலம்பம், பரதம், ஜமாப் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதின் நபின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு கலைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியின் மேடையில் பொங்கல் வைத்து வழிபட்டார் அதனை பின்னர் கண்ணை கட்டி கொண்டு உறியடித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பாஜக செயல் தலைவர் நிதின் நபின், தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு பொங்கல் பண்டிகையை போலவே பீகாரிலும் சேட் திருவிழா பண்டிகை பாரம்பரிய கலாச்சாரத்துடன் கொண்டாடப்படும் என்றும் இதுதான் தமிழுக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பு என்று தெரிவித்தார். தமிழுக்காக குரல் கொடுக்கும் தலைவர் மோடி என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக மேடையில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வட இந்திய தலைவர்களும் இங்கு வந்து நாம் பொங்கல் கொண்டாடுவதை பார்க்க வேண்டும் என்பதற்காக பாஜக சார்பில் இந்த பொங்கல் விழாவை கொண்டாடி வருவதாக தெரிவித்தார். கொங்கு மண்டலம் என்பது நம் ஆதரவான மண்டலம் என தெரிவித்த அவர் ஆனால் தற்பொழுது இந்த ஆட்சியில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

திருப்பரங்குன்றத்திலும் நாம் இது போன்ற விழாக்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் தை பிறந்தால் வழி பிறக்கும் என குறிப்பிட்ட அவர் இந்த தை பிறக்கும் பொழுது இந்த ஆட்சி மாறி ஆன்மீக ஆட்சி வரவேண்டும் என கூறினார். தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் பேசுவதற்கு அவர் அழைக்கும் பொழுது தமிழிசை அவர்களும் இசைக்க வேண்டும் என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.

பின்னர் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் நீங்கள் எல்லாம் இங்கு வந்ததும் சூரியன் காணாமல் போய்விட்டது என்றும் நிச்சயமாக மழை வரும் மழை வந்தால் குளங்கள் நிரம்பும் குளங்கள் நிரம்பினால் தாமரை மலர்ந்தே தீரும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், முதல்முறையாக நம்ம ஊரு மோடி பொங்கல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயல் தலைவர் நித்தின் நபின் உற்சாகத்தோடு கலந்து கொண்டதாக குறிப்பிட்டார். நம்முடைய பண்டிகைகள் என்பது பாரத நாட்டின் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்த நிகழ்வு என்றார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எந்த விதமான இந்துக்களின் பண்டிகைகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவிப்பதில்லை என குற்றம் சாட்டினார். பொங்கல் பண்டிகையின் பொழுது மட்டும் சமத்துவ பொங்கல் என்ற ஒன்றை கொண்டாடுவதாக குறிப்பிட்ட அவர் அனைத்து பானைகளிலும் பஞ்சுகளை வைத்து சிறுபான்மையினருடன் சேர்ந்து சமத்துவ பொங்கல் என்று இல்லாத ஒன்றை தமிழகத்தின் முதல்வர் கொண்டாடி வருவதாக தெரிவித்தார்.

சிறுபான்மையின மக்கள் எங்காவது பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது கலாச்சாரத்தோடு இறைவனை வணங்கும் நிகழ்வோடு சூரியனை வழிபடுவதை பார்த்திருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பிய அவர் சிறுபான்மையின மக்கள் அவர்களது மதப் பண்டிகையை கொண்டாடுவார்கள் அதை நாங்கள் மதிக்கிறோம் என்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் கூறிய வானதி சீனிவாசன், ஆனால் தமிழகத்திலேயே இல்லாத ஒன்றாக பொங்கல் பண்டிகையை கொண்டாடாத சமுதாயத்தினருடன் சேர்ந்து இந்து மக்களை ஏமாற்றுவதற்காக சமத்துவ பொங்கல் விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டாடிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழரின் பழமொழி இந்த பொங்கலில் இருந்து ஆரம்பித்து வேறு பிரமாண்டமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய உள்ளதாக தெரிவித்தார். பிரதமர் கூடிய விரைவில் தமிழகம் வர உள்ளதாக தெரிவித்த அவர் இதன் பின்னர் தேர்தல் பணிகள் வேகம் எடுக்கும் எனவும் கூறினார். கொங்கு மண்டலத்திற்கு தேசிய செயல் தலைவர் வருகை புரிந்து இருப்பது கூடுதல் உற்சாகத்தையும் பலத்தையும் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

கோவையில் மையக்குழு கூட்டம் ஒரு மணி நேரம் நடந்தது என தெரிவித்த அவர் அதில் விவாதித்த விஷயங்களை வெளியில் பேசக்கூடாது எனவும் தகுந்த நேரத்தில் யாருக்கு என்ன தகவல் வேண்டுமோ அவர்களுக்கு கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என கூறினார். விருப்ப மனு கேட்பது குறித்து இப்பொழுது வரை கட்சி எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்த அவர் சிங்காநல்லூரில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்திற்கு தேசிய செயல் தலைவர் செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார். பாஜகவின் வேகம் என்பது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எனவும் தெரிவித்தார்.

சிபிஐ விசாரணைக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது குறித்தான கேள்விக்கு, வழக்கமாக பாதுகாப்பு கேட்பது என்பது ஒரு நடைமுறை ஆனால் நிச்சயமாக கரூரை விட நல்ல பாதுகாப்பு டெல்லியில் வழங்கப்படும் என தெரிவித்துச் சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போத்தனூர் பகுதியில் புதிய டயாலிசிஸ் மையம்…

கோவை: கோவை போத்தனூர் பகுதியில் 98.70 லட்சம் மதிப்பில் புதிய டயாலிசிஸ் மையம் அமைய உள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் போத்தனூர் சத்திரம் வீதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.98.70 இலட்சம் மதிப்பீட்டில்...

Video

Join WhatsApp