கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டிப் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டி பொங்கல் விழாவானது இன்று கொண்டாடப்பட்ட நிலையில் பசுமாடு நவதானிய பட்டி தொட்டியில் முதலில் கால் வைத்துள்ளதால் உணவு உற்பத்தி செழிப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மத்திய பண்ணை வளாகத்தில் இன்று பட்டி பொங்கல் திருவிழா கோலங்கலமாக கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழகத்தின் பொறுப்புத் துணைவேந்தர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் நிகழ்ச்சியில் வள்ளி கும்மி ஆட்டம், கும்மி ஆட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இதில் வள்ளி கும்மி கலைஞர்களுடன் பல்கலைக்கழக பணியாளர்களும் சேர்ந்து நடனமாடினர்.
விழாவின் முக்கிய நிகழ்வான பட்டி மிதிக்கும் நிகழ்வில் பால், தயிர், நவதானியம், மஞ்சள், பன்னீர்,சந்தனம், குங்குமம், கோமியம் ஆகிய 9 பட்டி தொட்டிகள் அமைக்கப்பட்டு பசு மாடு அழைத்து வரப்பட்டது. அதில் பசுமாடு நவதானிய பட்டி தொட்டியில் முதலில் கால் வைத்தது. நவதானியத்தில் முதலில் கால் வைத்ததால் இந்த ஆண்டு விவசாயம் உணவு உற்பத்தி செழிப்பாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பல்கலைக்கழகத்தின் பொறுப்புத் துணைவேந்தர் சுப்பிரமணியம், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றும் உழவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் வேளாண் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இங்கு பணி புரியும் பண்ணை தொழிலாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரமாக்குவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும் பசுமாடு நவதானிய தொட்டியில் கால் வைத்துள்ளதால் இந்த ஆண்டு உணவு உற்பத்தி செழிப்பாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்த முறை நிர்வாக மாறுதல்கள் காரணமாக புதிய பயிரகங்கள் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக சுட்டி காட்டிய அவர் அது குறித்து மாநில வெளியீட்டு குழுவிற்கு முன்மொழிவதற்கு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது என்றும் ஓரிரு நாட்களில் அரசு ஒப்புதலுடன் வேளாண் துறை அமைச்சரால் புதிய பயிர் ரகங்கள் வெளியீடு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

