கோவை: கோவை தடாகம் பகுதியில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளை குளிப்பாட்டி தீவனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாடுகளை வணங்கும் தினமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
அதன்படி மாடு வைத்திருப்பவர்கள் அனைவரும் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, மாட்டு வண்டிகளை அலங்கரித்து பட்டி வைத்தும் பொங்கல் வைத்தும் மாட்டுப்பொங்கலை கொண்டாடுவார்கள்.

அதன்படி கோவை மாவட்டத்தில் கணுவாய், காளையனூர், தடாகம், உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், மாடுகளை வைத்திருப்பவர்கள், கோசாலை மற்றும் மாட்டுப் பண்ணை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் இன்று மாலை மாட்டு பொங்கலை கொண்டாடுகின்றனர்.
இன்று அதிகாலை மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி விட்டு மேய்ச்சல் முடிந்து வந்த மாடுகளுக்கு தீவனம் வழங்கி குளிப்பாட்டி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இன்று மாலை தோட்டத்திலோ அல்லது மாட்டு கொட்கைகளிலோ பட்டி வைத்து, பொங்கல் வைத்து மாட்டுப் பொங்கலை கொண்டாட உள்ளனர்.

