Header Top Ad
Header Top Ad

தானம் கொடுத்தார் தங்கமணி… 5 பேர் மறுவாழ்வு பெறுகின்றனர்!

கோவை: விபத்தில் சிக்கி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கமணி என்ற பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாகக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் மறுவாழ்வு பெறுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேவேந்திர குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவரது மனைவி தங்கமணி (வயது 43).

இவர் கட்டிடத் தொழிலாளியான தங்கமணி, தனது உறவினருடன் ஆனைமலையில் உள்ள ஒரு கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

திடீரென அவர் இருசக்கர வாகனத்திலிருந்து வழுக்கி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisement

உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தங்கமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் தங்கமணிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், தங்கமணியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவர் மூளைச்சாவு அடைந்தார்.

இதனை அரசு மருத்துவக்குழு உறுதி செய்தது. இதையடுத்து தங்கமணியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர்.

அரசு மருத்துவமனை டீன் நிர்மலா அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதல் படி தங்கமணியின் உடலிலிருந்து கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் தானமாகப் பெறப்பட்டன.

அதில் கல்லீரல் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

இதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற உள்ளனர். உடல் உறுப்பு தானம் பெறப்பட்ட தங்கமணியின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Recent News