கோவை: பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் தரப்படவில்லை என்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
கோவை கொடிசியா மைதானத்தில், 16 ஆயிரம் பெண்களின் வள்ளிக்கும்மி நடன அரங்கேற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
வள்ளி கும்மி நடத்தினதில் கின்னஸ் சாதனை படைத்த பெண்களுக்கான பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது:
வள்ளிக்கும்மியில் பங்கேற்ற 16 ஆயிரம் பெண்களுக்கு, வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான்.
என்னைப் பொறுத்த வரை இந்த ஆட்சி மகளிருக்கான ஆட்சி தான். 16 ஆயிரம் பெண்கள் கும்மியாடியது பெரிய சாதனையாக அமைந்துள்ளது. சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும், மக்களுக்காக போராடியும் வாதாடியும், இந்த மேற்கு மண்டலத்தில் எங்களுடைய கவனத்தைப் பெற்றவர், அன்பிற்குரிய ஈஸ்வரன் என்ன பேசினாலும் எங்கு சென்று பேசினாலும், அதில் மேற்கு மண்டல மக்களின் நன்மை அடங்கி இருக்கும்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க-வுக்கு அமோகமான வெற்றி கிடைத்து இருக்கிறது என்றால் அது இந்த ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ்.
அதேபோல் வருகிற 2026 ஆம் ஆண்டு நிச்சயம் சொல்கிறேன் நாம்தான் வெற்றிபெறப் போகிறோம். ஆனால் மோடி தலைமையில் இருக்கக் கூடிய ஒன்றிய அரசு, நமது ஆட்சியைப் போல் இல்லாமல், வாக்களிக்காத தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களுடைய வஞ்சனையையும் கடந்து, தமிழ்நாடு வளர்ச்சியில் எல்லா துறைகளிலும் முன்னிலையில் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு முறையான நிதிகளை வழங்கி தமிழ்நாட்டிற்கு நன்மையைச் செய்து கொடுத்தால் உலக அளவில் நாம் தான் முன்னிலையில் இருப்போம்.
இன்று காலையில் கூட தொகுதி மறு சீரமைப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாதிக்கப்படாது என்ற உறுதியைப் பிரதமர் வழங்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து இது பற்றி விவாதித்து இருக்கிறோம்.
அதற்குப் பிறகு வட மாநிலங்கள் மட்டுமில்லாமல் வட மாநிலத்தில் இருந்து ஏழு தலைவர்கள், கொண்ட கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டு இருக்கிறோம்.
ஆனால் இதுவரை ஒப்புதல் வரவில்லை. தமிழ்நாட்டிற்கு வருகிறீர்கள், அப்போது தொகுதி மறு சீரமைப்பு குறித்துத் தெளிவுபடுத்த வேண்டும், என்று நான் கோரிக்கை வைத்தேன்.
ஆனால் மக்களின் முக்கியமான பிரச்சனைகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்க்கிற வகையில், பிரதமர் சென்றுவிட்டார். நம் கோரிக்கைகளை தவிர்க்கிறவர்களை, நிச்சயம் தவிர்ப்போம் என்று தமிழக மக்கள் பதில் கொடுக்க வேண்டும்.
இந்த வள்ளிக்கும்மி நிகழ்ச்சியில், எம்.பி.ராஜா, அமைச்சர்கள் எவ.வேலு, செந்தில் பாலாஜி, வெள்ளக்கோவில் சாமிநாதன், ம.சுப்பிரமணியன், கயல்விழி செல்வராஜ், எம்.எல்.ஏ ஈஸ்வரன், கொறடா ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.