கோவை: கோவையில் இன்று காலை பணிக்குச் சென்ற பெண் மீது லாரி ஏறிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை வடவள்ளி பொம்மணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தீன தயாளன். இவரது மனைவி ஜாஸ்மின் ரூத்(39).
இவர் துடியலூர் அருகே உள்ள வாகன ஷோரூமில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இன்று காலை அவர் வழக்கம் போல ஸ்கூட்டியில் பணிக்கு சென்றார். அவர் இடையர்பாளையம் – வடவள்ளி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள சிக்னல் அருகே அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக ஸ்கூட்டி மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜாஸ்மின் ரூத் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் ஹெல்மெட் உடன் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் சிறிது தூரம் நிற்காமல் சென்றார். இதனைப்பார்த்த பொதுமக்கள் லாரியை சிறை பிடித்தனர்.
தகவல் அறிந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
சிறைபிடிக்கப்பட்ட டிரைவர் நான் விபத்து ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வேலைக்கு சென்ற பெண் லாரி மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.