Plane Crash: கருகிய நிலையில் மீட்கப்படும் உடல்கள்… கதறும் உறவுகள்! – Video Footages

Plane Crash: குஜராத்தில் விமான விபத்தில் சிக்கியோரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டு வருகின்றன.

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் விமானம் லண்டனை நோக்கிப் புறப்பட்டது.

Advertisement

இதில் விமானி, பணியாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் என 242 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள்ளாக அருகிலிருந்த மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்து நொறுங்கியது.

இந்த விமானத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணியும் பயணித்துள்ளார். விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்று தெரியாத நிலையில் தற்போது வரை 50 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இந்த விமானத்தில் 11 சிறுவர்கள் மற்றும் 2 குழந்தைகளும் பயணித்த நிலையில், அவர்களது சொந்தங்கள் விபத்து நடைபெற்ற இடத்தில் கதறி வருகின்றனர். உடல்கள் கருகிய நிலையில் எது தங்கள் உறவுகள் என்று தெரியாமல், சொல்லிலடங்கா துயரை அனுபவித்து வருகின்றனர்.

Advertisement

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

விபத்துக்குள்ளான இந்த விமானம் 11 ஆண்டுகள் 5 மாதங்கள் பழமையான, நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டது என்று கூறப்படுகிறது. இருப்பினும் விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. இந்த விபத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெறும், உடல்கள் கருகிக்கிடக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. மேலும், பயணிகள் பலரும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிப்பதற்கு முன்பு, ஆர்வத்துடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்த புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் விமானம் மருத்துவ கல்லூரி மீது விழுந்துள்ளதால், மருத்துவர்கள் எத்தனை பேர் பலியாகியுள்ளனர் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

விபத்து நடைபெற்ற இடத்தில் தற்போது மருத்துவ முகாம்கள் அமைக்கபட்டுள்ளன. மருத்துவ உதவி எண்களை குஜராத் மாநில அரசு வெளியிட்டுள்ளது.

போயிங் 787-8 ரக விமானம் இதுவரை விபத்திற்கு உள்ளானதே இல்லை என்றும், முதன்முறையாக இந்த ரக விமானம் விபத்தில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விமானம் விபத்தில் சிக்கும் முன்பாக விமானத்தின் பைலட் ‘மே டே கால்’ (ஆபத்து நேரத்தில் விடுக்கப்படும் எச்சரிக்கை) விடுத்துள்ளார். இருப்பினும், விமானத்தின் கருப்பு பெட்டியை ஆய்வு செய்வதன் மூலம் விபத்தின் போது என்ன நடந்தது என்று தெரியவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent News