கோவை: நல்ல பாடல்கள் வேண்டும் என்று தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய போகிறார்கள் அப்போது நல்ல பாடல்கள் வரும் என வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் புத்தக திருவிழாவில் புத்தகத் திருவிழாவில் வள்ளுவர் மறை வைரமுத்து உரை நூல் கையொப்பமிடம் நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு புத்தகங்கள் வாங்கியவர்களுக்கு கையொப்பமிட்டார். முன்னதாக புத்தக அரங்குகளை பார்வையிட்ட அவர் சில நூல்களை வாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய வைரமுத்து, வாசகர்கள் வரிசையில் நிற்பதை பார்க்கும் பொழுது தமிழ் வரிசையில் நின்று வாழ போகிறது என்று தெரிகிறது. புத்தகத்தில் கையெழுத்திடும் பொழுது நான் தலைகுனிந்து இருப்பேன் என் பேனா தலை குனிந்து இருக்கும் அப்பொழுது தமிழ் தலை நிமிர்ந்து நிற்கும் என்றார்.
திருவள்ளுவர் தமிழர்களின் ஒரே ஒரு அடையாளம் திருக்குறள் தமிழர்களின் ஞான செல்வம், பெரியவர்கள் குழந்தைகள் முன்பு திருக்குறளை வாசிக்கும் பொழுது வாய்விட்டு வாசியுங்கள் வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் வாய்விட்டு வாசித்தால் தமிழுக்கு இருக்கின்ற நோய் போகும் என கூறினார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வாசிப்பு திறன் குறைவாக இருக்கிறது என்ற கூற்றை ஒரு வழியில் ஏற்றுக்கொள்கிறேன் இன்னொரு வழியில் அதனை மறுக்கிறேன்,
வாசிப்பின் ஊடகம் தான் மாறி உள்ளது. காகிதங்களின் மூலம் வாசிப்பது மாதிரி மின் ஊடகங்களின் மூலம் வாசிக்கிறோம் என்றார்.
அனைத்து புத்தகங்களையும் வாசிப்பது என்பது மாறி தேர்ந்தெடுத்து புத்தகங்களை வாசிப்பது என்ற பழக்கம் தமிழர்கள் மத்தியில் புத்துணர்ச்சியோடு பரவி வருகிறது என்றார்.
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் புதிய புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும், பள்ளி பாடங்களை சொல்லித் தருவது ஒரு பணி, பள்ளிக்கு வெளியில் இருக்கின்ற அறிவு நூல்களை சொல்லித் தருவது ஆசிரியர்களின் பெரும் பணி என தெரிவித்தார்.
படங்களில் வரும் பாடல்களில் வரிகள் மோசமாக இருப்பது குறித்தான கேள்விக்கு அந்தக் குற்றச்சாட்டில் முழுக்க உண்மை இல்லாமலும் இல்லை இது ஒரு காலமாற்றம் வெள்ளம் போல் வருகிறது வெள்ளம் வடிந்து நன்னீர் கிடைப்பது போன்று காலப்போக்கில் இவையெல்லாம் சலித்து போய் நல்ல பாடல்கள் வேண்டும் என்று தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறார்கள் அப்போது நல்ல பாடல்கள் வரும் என்றார்
தமிழை முதலில் பனை ஓலையில் ப்டித்தோம் அதற்கு முன்பு பட்டயத்தில் படித்தோம்,கல்லிலும் களிமண்ணிலும் படித்தீர்கள் அவையும் மொழியை கொண்டு சேர்க்கின்ற ஊடகங்கள் என கூறிய அவர், காகிதம் கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஊடகம் ஊடகங்கள் மாறிக்கொண்டே இருக்கும் ஆனால் வாசித்தல் மாறாது வாசித்தல் இல்லாமல் ஒரு தலைமுறை நகரவே முடியாது என தெரிவித்தார்.