சென்னை: அ.தி.மு.க., அண்ணாவின் கொள்கையில் இருந்து விலகி பயணிப்பதாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தி.மு.க-வில் இணைந்த அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப் போல் இ.பி.எஸ்., பேசுவதாகவும் விமர்சித்துள்ளார்.
ஆரம்பம் முதலே அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியை விமர்சித்து வந்தவர் அன்வர் ராஜா. அ.தி.மு.க-வின் ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் இவர்.
அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தமிழக அமைச்சராக பணியாற்றிய இவர், அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில செயலாளராகவும் பதவி வகித்து, தென் மாவட்டங்களில் சிறுபான்மையினரின் முகமாக திகழ்ந்தார்.
கூட்டணியால் கடும் அதிருப்தியில் இருந்த அன்வர் ராஜா, தி.மு.க-வில் இணைய உள்ளதாக தகவல் கிடைத்ததும் அவரை கட்சியில் இருந்து நீக்கி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அன்வர் ராஜா இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்பு தி.மு.க-வில் இணைந்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அழிக்க நினைக்கும் பா.ஜ.க
தன்னுடன் கூட்டணி வைத்த கட்சிகளை அழித்து வருகிறது பா.ஜ.க. அந்த வகையில் அ.தி.மு.க-வை அழிக்க நினைக்கிறது.
தேர்தலுக்காக இந்த கூட்டணி அமைக்கப்படவில்லை. அ.தி.மு.க-வை அழித்து தி.மு.க-வுடன் மோதுவதே பா.ஜ.க-வின் நோக்கமாக உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா ஒரு இடத்தில்கூட சொல்லவில்லை. தானே முதல்வர் வேட்பாளர் என்பதை எடப்பாடி பழனிசாமியால் உறுதி கூடப் படுத்த முடியவில்லை.
இந்தியா, பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் கூறிக்கொண்டே இருக்கிறார். அதனை நாம் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதேபோல் தான், நான்தான் முதல்வர் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
கட்சியில் அனைவரும் மனவருத்தத்தில் உள்ளனர். அங்கிருந்து வெளியேறுவது அவரவர் முடிவு. பா.ஜ.க-வின் கையில் சிக்கியுள்ளது அ.தி.மு.க
இந்த தேர்தலில் தி.மு.க மீண்டும் வெற்றி பெற்று, ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவார். என்னை கொள்கைப் பயணத்தில் இணைத்துக்கொண்ட ஸ்டாலினுக்கு நன்றி.
இவ்வாறு அன்வர் ராஜா பேசியுள்ளார்.
அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணிக்குள் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற சலசலப்பு நீடித்து வரும் நிலையில், கட்சியில் இருந்து மூத்த நிர்வாகி விலகி, தி.மு.க-வில் இணைந்துள்ளது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.