சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதால் அவரது 2 நாள் நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் திருப்பூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு, நலத்திட்டங்களை வழங்க இருந்தார்.
இதனிடையே இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட போது அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னை அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதலமைச்சர் நடைபயணம் மேற்கொண்ட போது அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே ஸ்டாலினை 2 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவரது திருப்பூர் வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் முதலமைச்சரை மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். அமைச்சர் துரைமுருகன், “ஸ்டாலின் நலமுடன் உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.