கோவை: இந்திய பொருட்களுக்கு டிரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்தது தொடர்ந்து கோவையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் மன்னனை கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பிரதமர் மோடியை கண்டித்தும் இந்திய அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை உடனடியாக நிறுத்திட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்மையில் இந்திய பொருள்களுக்கு 50 சதவிகிதம் வரி உயர்வை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்ததற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபரின் வரி உயர்வு மிரட்டலுக்கு அடிபணிய கூடாது, இந்திய அமெரிக்க வர்த்தக பேச்சு வார்த்தையை உடனடியாக நிறுத்திட வேண்டும், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடனான வர்த்தக நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்
இந்திய சந்தையின் ஆக்கிரமிப்பிற்கு வழிவகுக்கும் இந்தியா இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி- கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க அதிபருக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் LPF, INTUC, HMS, AITUC, CITU, MLF உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பிரதமர் மோடியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.