கோவை: மேட்டுப்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவு பகுதியில் கேஸ் நிரப்ப வந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் தனது ஆம்னி காரில் வீரபாண்டி பிரிவு பகுதிக்கு வந்துள்ளார்.
அங்குள்ள கேஸ் பங்கில் தனது காருக்கு கேஸ் நிரப்புவதற்காக சென்றுள்ளார் கேஸ் நிரப்பி கொண்டிருந்தபோது திடீரென கசிவு ஏற்பட்டு ஆம்னி காரில் திடீரென தீ பற்றியது.
அந்த தீ மளமளவென பரவி காரின் முன் பகுதி பின்பகுதி மற்றும் இருக்கைகள் என அனைத்து பகுதிகளும் வேகமாக பரவி கார் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது.
இதனால் காரில் இருந்தவர்கள் மற்றும் பெட்ரோல் பங்கில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு ஓடி சென்று சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
பின்னர் தீ விபத்து குறித்து பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இருப்பினும் கார் முழுவதுமாக தீப்பற்றி எரிந்து சேதமானது.