கோவை: தமிழகத்திலேயே முதன் முறையாக கோவை மாநகர போலீசில் ரோந்து வாகனங்களுக்கு பிரத்யேக ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டுள்ளன.
கோவை மாநகரில் ரோந்து பணிகளை மேற்கொள்ளும் போலீசார், சுழற்சி முறையில் பணி மாறுவதால், ஒரு பிரச்சினை என்றதும் குறிப்பிட்ட பகுதிக்கான ரோந்து போலீஸ்காரரை சரியாக அடையாளம் கண்டு உதவிக்கு அழைப்பதில் பொதுமக்களுக்கு சிக்கல் இருந்து வந்தது.
இந்த பிரச்சினையை தீர்க்கும் விதமாக இன்று காவல் ரோந்து வாகனங்களுக்கு பிரத்யேக ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ரோந்து செல்லும் வாகனத்திற்கே இந்த செல்போன் வழங்கப்பட்டுள்ளது.
இதனால், பணியில் எந்த போலீஸ்காரர் இருந்தாலும், மக்கள் உடனடியாக அவரை உதவிக்கு அழைக்க முடியும். இதனை மாநகர காவல் ஆணையர் அறிமுகம் செய்துவைத்து, போலீசாருக்கு இன்று ஸ்மார்ட்போன்களை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை மாநகரத்தில் கடந்த ஜனவரியில் இருந்து ரோந்து காவலர்கள் மூன்று முறைகளில் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
இந்த நிலையில் தற்போது கூடுதலாக 19 பீட்டுகள் (ரோந்து) இணைக்கப்பெற்று மொத்தம் 52 பீட் காவலர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அந்த ரோந்து வாகனங்களுக்கு பிரத்யேக தொலைபேசி எண்ணும், ஸ்மார்ட்போனும் வழங்கப்பட்டுள்ளன.
அவசர நேரங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கும் பட்சத்தில், அந்த புகார் மாநில கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும். அங்கிருந்து உடனடியாக, புகார் எந்த பகுதியில் இருந்து வந்ததோ, அந்தப் பகுதியில் இரவு நேரத்தில் அல்லது சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டிருக்கும் ரோந்து வாகனத்தின் தொலைபேசி எண்ணிற்கு இணைப்பு மாற்றப்படும்.
இதனால், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல முடியும். மேலும் பொதுமக்கள் அனைவரும் QR கோடு மூலம் ஸ்கேன் செய்து தங்கள் பகுதியில் உள்ள ரோந்து பீட் பார்க்கும் காவலர்களின் எண்களை அறிந்து வைத்துக் கொள்ளலாம்.
இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இதனால் பொதுமக்கள் உடனடியாக போலீசாரை அணுக முடியும்.
இதுபோன்று ரோந்து காவலர்களுக்கு செல்போன்கள் கொடுக்கப்படும் பட்சத்தில் கூடுதல் பணி சுமை ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. சுழற்சி முறையில் தான் அவர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் வயதானவர்களுக்கு விடுமுறையும் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சரவண சுந்தர் கூறினார்.