கோவை: கோவையில் 6 வயது சிறுவனுக்கு இருதய செயலிழப்பு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உடல் உறுப்பு தானம் செய்வோரின் உதவியை பெற்றோர் நாடியுள்ளனர்.
கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர்கள் பத்மநாபன்-பிரியங்கா தம்பதியினர். பத்மநாபன் தனியார் கல்லூரியில் எலக்ட்ரீசியன் ஆக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 6 வயதில் தர்சன்ஆகாஷ் என்ற மகன் உள்ளார்.
தர்சன்ஆகாஷிற்கு “Severe Congestive Cardiac Failure” எனும் இருதய பாதிப்பு உள்ளது. இதற்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் அதற்கு 35 லட்சம் முதல் 45 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு சீக்கிரம் அறுவை சிகிச்சை செய்கிறோமோ குழந்தையை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் எலக்ட்ரீசியன் பணிக்கு சென்று கொண்டிருக்கும் தனக்கு இவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியாததால் தற்பொழுது பலரது உதவி தேவைப்படுவதாக சிறுவனின் தந்தை பத்மநாபன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறுவன் தர்சன் ஆகாஷ்க்கு O பாசிட்டிவ் ரத்தம். உடல் உறுப்புகள் தானம் செய்வோர் தங்களது மகனுக்கு உதவி புரியுமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர், ICU, வெண்டிலேட்டர், மருந்துகள் என நாள் ஒன்றுக்கு 70 முதல் 74 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகிறது என்றும் இதயம் கிடைக்கின்ற வரையிலும் வெண்டிலேட்டர், மருந்துகள் உதவிகளுடன் தான் சிகிச்சை பெற வேண்டும் எனவும் எனவே யாரேனும் உதவி புரியுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
பத்மநாபனை
86681 85454 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.