கோவை: கோவை சூலூரில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்துதுப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது
கோவை மாவட்டம், சூலூர் அருகே சுகந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மனைவி மேரி ஜூலியானா (47), பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த வியாழக்கிழமை, சிகரெட் வாங்குவதாகக் கூறி இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், மேரி ஜூலியானாவை சுத்தியால் தாக்கி, அவரிடமிருந்து 4 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த மேரி ஜூலியானா, கோவை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தங்கராமன் மேற்பார்வையில், சூலூர் இன்ஸ்பெக்டர் செல்வராகவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தனிப்படையினரின் தீவிர விசாரணையில், கரூர் மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (62), தற்போது ஆந்திராவின் ஹைதராபாத்தில் வசிப்பவர், மற்றும் பீகார் மாநிலம் சுபாவின் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் சாணி (22) ஆகியோர் சூலூர் ராசி பாளையம் பகுதியில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டனர். மேலும் ஒரு முக்கிய குற்றவாளியையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இவர்கள் சூலூரில் பெரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக மேலும் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, அல்லது வேறு குற்றச் சதித்திட்டங்கள் உள்ளனவா என்பது குறித்து ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
மூன்று குற்றவாளிகளையும் தீவிர விசாரணைக்குப் பின்னர் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.