கோவை: கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாரம்பரிய உடை அணிந்து ஓணம் பண்டிகையை உற்சாகமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடினர்.
மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை வருகின்ற வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. கேரள மாநிலத்தில் 10 நாட்களுக்கு முன்பே பண்டிகையானது துவங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கேரளவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் ஓணம் பண்டிகை தற்பொழுது கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழகத்தில் இன்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான கேரள மாணவர்களும் தமிழக மாணவர்களும் ஒன்றாக இணைந்து மலையாள மக்களின் பாரம்பரிய உடை அணிந்து ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
பின்னர் திருவாதிரை களி நடனம், மகாபலி மன்னனை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து செண்டை மேளம், பலவண்ண காவடிகள் உட்பட சினிமா பாடல்களுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.