கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே ரோலக்ஸ் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்ற நிலையில் அதனை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் ரோலக்ஸ் காட்டு யானை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை பிடிப்பதற்கு ஏற்கனவே மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு 50 பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு கெம்பனூர் அருகே ஒரு மயக்க ஊசி செலுத்திய நிலையில், இரண்டாவது மயக்க ஊசி செலுத்தும் போது ரோலக்ஸ் யானை காட்டிற்குள் சென்று மாயமானது.இதையடுத்து ட்ரோன் கேமரா மூலம் ரோலக்ஸ் யானை எங்கு உள்ளது என்று தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தாமதமின்றி உடனடியாக ரோலக்ஸ் காட்டு யானையை பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு அறிவுறுத்தினர்.
காட்டு யானையை பிடிப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு மேலாக கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு எந்த பயனும் இன்றி காட்சி பொருளாகவே இருப்பதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.