கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை சோகக் கடலில் முழ்கடித்துள்ளது.
தவெக தலைவர் விஜய் தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நேற்று மாலை நாமக்கல் சென்றார். அங்கு தனது பரப்புரையை முடித்துவிட்டு இரவு 7 மணியளவில் கரூரில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அவரது பிரச்சாரத்திற்கு 10,000 பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 30,000 மக்கள் கூடினர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை அப்பாவி குழந்தைகள் உட்பட மொத்தம் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இருவர்
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்டோரில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கணவன், மனைவி, குழந்தைகள், சகோதரர்கள் என்று தங்கள் உறவுகளை இறந்த துயரத்தில் கரூர் அரசு மருத்துவமனை வளாகம் சோகக்கடலில் மூழ்கியுள்ளது. ஆறுதல் தேட ஆள் இல்லாமல், ஒவ்வொருவரும் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்து கதறி வருகின்றனர்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் உட்பட தமிழக அமைச்சர்கள் கரூரில் முகாமிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பதிலளிக்க மறுப்பு
இந்த துயர சம்பவம் அரங்கேறியதும் கருரில் இருந்து சென்னை புறப்பட்ட தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றார். இது கடும் கண்டனத்தை ஏற்படுத்திய நிலையில், 4 மணி நேரம் தாமதமாக தனது இரங்கல் செய்தியை விஜய் வெளியிட்டார்.
அதே நேரத்தில் முதல்வர் உட்பட 3 அமைச்சர்களும் முன்னாள் அமைச்சரும் இரவே சம்பவ இடத்திற்குச் சென்றனர். அங்கு மருத்துவப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். கரூரில் போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலையில், திருச்சி, சேலம், மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அரசு மருத்துவர்கள் அங்கு சென்றுள்ளனர். தற்போது 350 மருத்துவர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கண்டனங்கள்
விஜய்யைக் காண 10 மணி நேரமாக காத்திருந்த மக்களுக்கு உரிய வசதிகள் செய்து தரவில்லை, குடிநீர் கூட கிடைக்காமல் அவதிப்பட்டனர் என்று பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து அரசியல் கட்சியினரும், பிரபலங்களும் விஜய்க்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
உரிய பாதுகாப்பு வழங்காமல் இருந்ததே இந்த துயரத்திற்கு காரணம் என்றும், வேண்டுமென்றே குறுகிய இடத்தை ஒதுக்கியதாகவும் தவெக தொண்டர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இதனிடையே சென்னையில் விஜய்யின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ கான்பிரன்சிங் மூலமாக விஜய் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அவரது அடுத்த வார பயணத் திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வழக்குப்பதிவு
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகி உட்பட்ட 4 பேர் மீது கரூர் போலீசார் கொலை முயற்சி, அலட்சியமாக செயல்படுதல், அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக விஜய் மீது இதுவரை வழக்குப் பதியப்படவில்லை.
வழக்கு விபரங்கள்
BNS பிரிவு 105 – கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை.
BNS பிரிவு 110 – குற்றமற்ற கொலை செய்ய முயற்சி.
BNS பிரிவு 125 – மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர/அலட்சிய செயல்களுக்கு தண்டனை
BNS பிரிவு 223 – பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை குற்றமாக்கப்படுகிறது.
TNPPDL சட்டம் பிரிவு 3 – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்
விசாரணை ஆணையம்
இந்த துயரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா தேவி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் தற்போது கரூர் சென்றுள்ளது. விரைவில் விசாரணை தொடங்க உள்ளது.
இந்த ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில், அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நிவாரணம் அறிவித்தார் விஜய்
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் காயமடைந்தவரகளுகு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
“இது ஈடு செய்ய முடியாத இழப்பு. கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.
நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.
என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்” என்று குறிப்பிட்டு விஜய் நீண்ட அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளார்.
விஜய் கைதா?
ஏற்கனவே ஹைதராபாத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் திரையங்கத்திற்கு வந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இதேபோல் விஜய் மீதும் நடவடிக்கை பாயுமோ என்ற அச்சத்தில் அக்கட்சியினர் உள்ளனர்.
எவ்வளவு தான் பாதுகாப்பு வழங்கினாலும், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது ஒரு தலைவரின் பொறுப்பு. அவர் (விஜய்) எவ்வளவு தாமதாமாக வந்தார், என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். யார் மீது தவறு என்று அரசியல் பேச விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும், ஆணையம் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே சட்ட நடவடிக்கை இருக்கும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் கேள்வி எழுப்புங்கள் என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார்.
தமிழக வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்துள்ள இந்த சம்பவத்தில், விஜய் உட்பட தவெக நிர்வாகிகள் மீது என்ன நடவடிக்கை பாயும், என்பதை ஒட்டுமொத்த நாடே உன்னிப்பாக கவனித்து வருகிறது.
அதே நேரத்தில் விஜய்யை கைது செய்யும் அளவிற்கு, திமுக அரசுக்கு துணிச்சல் உள்ளதா? என்ற கேள்வியும் பொது வெளியில் எழுந்துள்ளது.