கோவை: ஜிடி மேம்பாலத்தில் அதிகபட்ச வேகம் இறுதி செய்யப்படும் என்று மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
அவினாசி சாலையில் 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட ஜிடி மேம்பாலம் தமிழகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. மாநிலத்தில் மிக நீளமான பாலம் என்பதால், இதில் பயணிக்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே, கடந்த திங்கட்கிழமை இந்த பாலத்திலிருந்து அதிவேகமாக கோல்டுவின்ஸ் பகுதியில் இறங்கிய கார் ஒன்று நிலை தடுமாறி சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் காரில் பயணித்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் கோவை மக்களை அதிர்ச்சியடையச் செய்தது.

30 கிமீ வேகம்
இதனிடையே, மேம்பாலத்தில் 30 கிமீ வேகத்தில் பயணிக்க பரிந்துரைப்பதாகவும், ஏஐ கேமிராக்கள் பொருத்தப்பட்டு, அதி வேகமாகச் செல்வோர் மீது வழக்குப் பதியப்படும் என்றும் மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்திருந்தார்.
மணிக்கு 30 கி.மீ வேகம் என்பது மிகவும் குறைந்தபட்ச வேகம் என்றும், இதனால் மேம்பாலத்தில் பயணிப்பதற்கு பதிலாக சாலையிலேயே சென்றுவிடலாம் என்றும் பொதுமக்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர்.
இதனிடையே காவல் ஆணையர் சரவண சுந்தர் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

வேகத்தால் விபத்து
அவர் கூறுகையில், “கோவை அவினாசி சாலை மேம்பாலத்தில் அதீத உற்சாகத்தில் மக்கள் 100 கி.மீ., வேகத்திற்கு மேல் செல்கின்றனர். அதனால் தான் திங்கட்கிழமை விபத்து ஏற்பட்டு மூவர் உயிரிழந்தனர்.
இதன் காரணமாகவே, மேம்பாலத்தில் செல்வோரின் வேகத்தைக் குறைக்கும் விதமாகவும், அவர்களை எச்சரிக்கும் நோக்கிலும், ரேம்ப்கள் அருகே செல்கையில் 30 கி.மீ வேகத்தில் செல்லுமாறு பரிந்துரைக்கிறோம்.
ஆரம்பகட்ட சிக்கல்கள் சரியாகிவிட்டால், அதிகபட்ச வேகம் குறித்து இறுதி முடிவு செய்யப்படும். இது 60 கி.மீ., வரை இருக்கலாம்” என்றார்.




