கோவை: போத்தனூரில் லாரியை திருடிவிட்டு விற்க முடியாமல் சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை கே ஜி சாவடி, பாலக்காடு ரோட்டை சேர்ந்தவர் அப்பாஸ்( வயது 47 ). சம்பவத்தன்று இவர் அவரது லாரியை போத்தனூர் அருகே, குறிச்சி பிரிவு ரோட்டில் உள்ள இரும்பு கம்பி நிறுவனம் அருகில் நிறுத்தி இருந்தார்.
அதன் பிறகு அவர் சென்று பார்த்த போது அவரது லாரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து போத்தனூர் போலீஸ் நிலையத்தில் அப்பாஸ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியையும் அதை திருடி சென்ற நபரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அப்பாஸின் லாரியை போலீசார் போத்தனூர் அருகே மடக்கினார். அதை திருடி சென்ற சென்னையைச் சேர்ந்த தௌலத் பாஷா( வயது 35 ) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தவ்லத் பாஷா ஏற்கனவே ஆட்டோ திருடிய வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று உள்ளார்.
மீண்டும் வெளியே வந்த அவர், அப்பாஸின் லாரியை திருடி சென்று ஈரோடு அருகே பவானியில் விற்க முயன்று உள்ளார்.
ஆனால் திருட்டு லாரியை யாரும் வாங்காததால் மீண்டும் சுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கோவை அருகே அவர் சென்றபோது போலீசார் மடக்கி கைது செய்தனர்.


 
                                    
