குடும்ப கட்டுபாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம்- கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை அம்மன்குளம் ஹவுஸிங் யூனிட்டில் வசித்து வருபவர்கள் அண்ணாதுரை- சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் 9 வருடங்கள் கழித்து சங்கீதா மீண்டும் மூன்றாவது கர்ப்பமாகியுள்ளார்.

6 மாத கர்ப்பிணியான சங்கீதா அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் திங்கட்கிழமை வயிற்று வலி ஏற்பட்டதால் தனியாக அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்பொழுது உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் சங்கீதா அவரது கணவர் மற்றும் மாமியாருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து இருவரும் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

அப்பொழுது தாய் மற்றும் கருவில் உள்ள குழந்தை இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால் தான் தாயை மட்டுமாவது காப்பாற்றலாம் என்று மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது. பின்னர் அறுவை சிகிச்சை செய்து ஆறு மாத குழந்தையை உயிரிழந்த நிலையில் வெளியில் எடுத்து உள்ளனர். அதனை தொடர்ந்து சங்கீதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து அறுவை சிகிச்சை செய்த பகுதியிலிருந்து மலக் கழிவுகள் மற்றும் சிறுநீர் வெளியேறியுள்ளது. அதனால் மீண்டும் சங்கீதாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்து 27ம் தேதி அறுவை சிகிச்சை செய்தனர்.

பின்னர் நேற்று அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடல் பிணவறைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் பிணவறை முன்பு திரண்டனர். உரிய சிகிச்சை அளிக்காமல் அறுவை சிகிச்சை செய்து அந்த தையல்களை சரியாக போடாததாலேயே சங்கீதா உயிரிழந்து விட்டதாக அவரது கணவர் அண்ணாதுரை மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் 9 ஆண்டுகளுக்கு முன்பே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சங்கீதா மேற்கொண்டு விட்டதாகவும் அப்படி இருக்கும்பொழுது மீண்டும் கர்ப்பம் தரித்ததாகவும் சங்கீதாவின் கணவர் அண்ணாதுரை தெரிவித்தார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட பொழுது குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தாலும் ஒரு சில சமயங்களில் இவ்வாறு நடக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டதாக அண்ணாதுரை கூறினார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தினாலேயே உயிரிழப்பு ஏற்பட்டு விட்டதாக சங்கீதாவின் கணவர் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலியிடம் விளக்கம் கேட்ட பொழுது சங்கீதாவிற்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் இருப்பதாகவும் அறுவை சிகிச்சைக்கு பிறகு தையல் போட்ட இடத்தில் மலக்கழிவுகள் வெளிவந்ததால் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ததாகவும் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் பொழுதே மீண்டும் அவருக்கு உயர்த்த அழுத்தம் ஏற்பட்டு அதனை சரி செய்ததாக தெரிவித்தார்.

பின்னர் 29ஆம் தேதி இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் இழந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுத்த பொழுதே வளர்ச்சி குறைவாக இருந்ததாகவும் 350 கிராம் எடை மட்டுமே இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும் குடும்ப கட்டுப்பாடு செய்து இருந்தாலும் சிலர் சமயங்களில் அது Failure ஆகிவிடும் அதனால் அவர்கள் மீண்டும் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

Recent News

Video

Join WhatsApp