கோவை: கோவையில் இயங்கி வரும் நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவிகள் உணவு விஷயத்தில் கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலுமிச்சம்பட்டி அருகே அபிராமி என்ற நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கோவை உட்பட தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வந்து தங்கி 500க்கும் மேற்பட்ட மாணவிகள் நர்சிங் படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கல்லூரி விடுதியில் வழங்கப்படும் உணவு தரமற்று இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. புழுக்களும், பூச்சிகளும் மிதப்பதால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை அறிவித்துள்ளனர்.
ஆனால், இந்த புகாரின் பேரில் கல்லூரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே அக்கல்லூரியில் வழங்கப்பட்ட சுகாதாரமற்ற உணவை சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உணவு தரமற்ற முறையில் இருந்ததே உடல்நலக்குறைவு ஏற்படக் காரணம் என்று மாணவிகள் கூறிய நிலையில், இதைப்பற்றி யாரிடமும் வாய் திறக்கக்கூடாது என்று கல்லூரி நிர்வாகம் தரப்பில் மிரட்டலும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். இந்த கல்லூரியில் அடிக்கடி இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதாகவும், தரமற்ற உணவை வழங்கும் விடுதி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

