கோவை: தனியார் கல்லூரி விடுதி உணவு விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
கோவையில் தொடர்ச்சியாக தனியார் கல்லூரி விடுதிகளில் உணவில் குறைபாடுகள் ஏற்படுவதால் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒருசில தனியார் கல்லூரி விடுதி உணவு உட்கொண்ட பிறகு உடல் உபாதைகள் ஏற்பட்டதாக மாணவ மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருந்தனர்.
குறிப்பாக விடுதியில் வழங்கப்படும் உணவில் பூச்சிகள், புழுக்கள் இருந்ததாகவும் குடிநீரும் அசுத்தமாக இருந்ததாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டி பல்வேறு புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர். அதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
ஆய்வு செய்யுங்கள்
இந்நிலையில், கோவையில் தொடர்ச்சியாக இது போன்று தனியார் கல்லூரி விடுதியின் உணவில் குறைபாடுகள் இருப்பதால் மாணவ மாணவிகள் பெரிதளவில் பாதிக்கப்படுவதாகவும் எனவே தமிழக அரசு மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி அனைத்து தனியார் கல்லூரி விடுதிகளிலும் அதன் உணவகங்களிலும்
ஆய்வுகள் மேற்கொண்டு உணவின் தரத்தையும் குடிநீரின் தூய்மையையும் உறுதிப்படுத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பதாகைகளை ஏந்தி வலியுறுத்தினர்.
தனியார் கல்லூரிகளில் விடுதி உணவிற்காக பணம் வசூலிக்கப்படும் நிலையில் தரமான உணவை வழங்க வேண்டும் எனவும் இதனை மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

