கோவை: கோவையில் தோட்டத்து வீடுகளில் வசித்து வரும் தம்பதியினர் மத்தியில் கோவை போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
பல்லடத்தில் கடந்தாண்டு தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தாய், தந்தை மற்றும் மகன் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டனர். தீரன் பட பாணியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தில் கொலையாளிகள் இதுவரை சிக்கவில்லை. இதனிடையே ஈரோடு சிவகிரியில் இதோ போன்ற சம்பவத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தம்பதி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் கோவை மாவட்டம் முழுவதும் தோட்டத்து வீடுகளில் வசிக்கும் மக்கள் மற்றும் கிராமப்புறங்களில் தனியாக உள்ள வீடுகள் இருக்கும் பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், அங்கு கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அங்கு வசிக்கும் மக்களிடம் கண்காணிப்பு கேமிராவின் அவசியம், காவலன் மொபைல் செயலியை உபயோகிக்கும் முறை, சந்தேகத்துக்கிடமான ஆள் நடமாட்டம் இருந்தால் உடனே காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுதல், கதவில் அலாரம் அமைத்தல், உள்ளிட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
கருமத்தம்பட்டி, கிணத்துக்கடவு, அன்னூர், சூலூர், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தொடர் கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உங்கள் உறவினர்கள் தனி வீடுகளில் வசிப்பார்களேயானால் அவர்களுக்கு இச்செய்தியை பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திடுங்கள்.