கோவை: காதல் திருமணம் செய்து கொண்ட இளம் பெண்ணை அவரது தந்தை கழுத்தறுத்துக் கொல்வேன் என்று மிரட்டிய ஆடியோ வெளியாகியுள்ள நிலையில், பாதுகாப்பு கோரி மகள் கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பழனியாண்டி புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன், செல்லம்மாளின் மகளான பவிப்பிரியா (வயது 26). அப்பகுதியில் உள்ள கல்லூரியில் எம்.சி.ஏ படித்து உள்ளார்.
இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி, கொண்டே கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சேதுபதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இருவருக்கும் இடையே இருந்த நட்பு காதலாக மாறியது. இவர்களது காதல் குறித்து பவிப்பிரியா பெற்றோரிடம் தெரிவித்து சம்மதம் பெற முயற்சி செய்து உள்ளார்.
இதற்கு அவரது பெற்றோர் ஜாதியைக் காரணம் காட்டி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் வேறொரு நபரை திருமணம் செய்ய ஏற்பாடு செய்து உள்ளனர்.
இதுகுறித்து பவிப்பிரியா அவரது காதலனிடம் தெரிவித்து அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து இருவரும் சேதுபதியின் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் பவிப்பிரியாவின் பெற்றோரை சமாதானப்படுத்த திருமணத்திற்கு ஒப்புதல் பெற பவிப்பிரியா வீட்டிற்குச் சென்று உள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் அவரை அடித்து துன்புறுத்தி வீட்டில் அடைத்து வைத்து, எங்களுக்கு பிள்ளையே வேண்டாம் என்றும், “நைட்டோட, நைட்டா கழுத்தில் சுருக்கு போட்டு தூக்கில் தொங்க விட்டு விடுவோம் ஜாக்கிரதை” என்றும், திருமணம் செய்து கொண்டவரையும் ஆள் வைத்து முடித்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.
இதனால் அச்சம் அடைந்த பவிப்பிரியா ஆன்லைன் மூலம் காவல் துறையினருக்கு புகார் கொடுத்து உள்ளார்.
அதன் பின்னர் பொள்ளாச்சி மகாலிங்கம் காவல் நிலைய போலீசார் பவிப்பிரியாவை மீட்டு வந்தனர்.
தொடர்ந்து, காவல் நிலையம் சென்ற பவிப்பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், “நீ எங்கு சென்றாலும் நிம்மதியாக உயிருடன் வாழ முடியாது” என்று மிரட்டி உள்ளனர்.
காவல் நிலையத்தில் அவரது பெற்றோரிடம் “பவிப்பிரியாவின் வாழ்க்கையில் தலையிடக் கூடாது” என எழுதிக் கேட்டதற்கு, “எழுதித்தர முடியாது இருவரையும் என்ன செய்கிறோம் பார்” என்று மிரட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து போலீசாரின் பாதுகாப்புடன் சேதுபதியுடன் காவல் நிலையத்திலிருந்து வெளியேறினார்.
பவிப்பிரியாவின் உறவினர்கள் மிரட்டல் விடுத்ததால் இருவரும், நண்பர்கள் வீட்டில் தங்கினர்.
அப்போது பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்த சேதுபதியின் அம்மாவிடம் சென்று, சேதுபதியைக் கொலை செய்து விடுவதாகவும், இருவரையும் எங்கு பார்த்தாலும் வெட்டி வீசி விடுவோம் என்று பெண் வீட்டார் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
மேலும், அங்கிருந்த சேதுபதியின் தம்பி தமிழரசன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனிடையே ஆணவக்கொலைக்கு அஞ்சி சேதுபதி-பவிப்பிரியா தம்பதியினர் இன்று கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு புகார் அளித்து உள்ளனர்.
தமிழகத்தில் மேலும் ஒரு ஆணவக் கொலை நடப்பதற்கு முன்பு காவல் துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.