கோவை: கோவை பீளமேட்டில் அடுத்தடுத்து இரு பைக்குகளை திருடிய வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி சேரன் நகரை சேர்ந்தவர் நவீன் கார்த்திக் (20). கோவை பீளமேட்டில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7ம் தேதி தனது நண்பரின் பைக்கை வாங்கி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் பைக்கை ஐடி பார்க் அருகில் உள்ள ஆவின் பூத் பகுதியில் நிறுத்தி சென்றார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது பைக் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் பைக் கிடைக்கவில்லை. இதுகுறித்து நவீன் கார்த்திக் பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.
அதேபோல கோவை பட்டணம் நடுப்பாளையம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சவுந்தர் ராஜ் (30). டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரும் கடந்த 7ம் தேதி ஐடி பார்க் ஆவின் பூத் அருகே தனது பைக்கை நிறுத்தி சென்றார். அதனை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து சவுந்தர் ராஜ் பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.
இந்த இரு புகாரின் பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா கட்சிகளை கைப்பற்றி திருடர்களை தேடி வந்தனர்.
அதில் 2 பைக்யை திருடி சென்றது நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த ராஜ்குமார் (29) மற்றும் முகமது ரபீக் (30) ஆகியோர் என்பதும், அவர்கள் கோவை வந்து பைக்கை திருடி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோவையில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.