கோவை: கண் பரவையற்றவர்களுக்கு ரேஷன் கடைகளில் கட்டணமில்லாமல் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் வெயிலில் நின்று பார்வையற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு சார்பில் இன்று செஞ்சிலுவை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பார்வையற்றோருக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்குதல், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை கட்டணமில்லாமல் வழங்குவதற்கான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக வழங்குதல், அனைத்து வகை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊர்திப்படியை இரட்டிப்பாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கையில் ஸ்டிக் மற்றும் குடை வந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பார்வையற்றோர் கூட்டமைப்பின் தேசிய துணைத்தலைவர் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம், மூத்த உறுப்பினர் கண்ணன், ஆர்.டி.சின்ன கண்ணன், ஆலோசகர் சி.எம்.ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.