கோவை: பீளமேடு பகுதியில் பழுதடைந்த சாலையால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
கோவையில் புதிய சாலை பணிகள், சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது மற்றும் விடுபட்ட சாலை பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பல இடங்களில் பாதாள சாக்கடை மற்றும் 24 மணி நேர குடிநீர் திட்ட பணி காரணமாக தோண்டப்பட்ட சாலைகள் நீண்ட நாட்களாக சீரமைக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கொடிசியா ரோடு 23வது வார்டுக்குட்பட்ட ஜிஆர்ஜி நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள தெருவில் தார் சாலை முழுமையாக சேதமடைந்து மண் சாலையாக மாறியுள்ளது. தற்போது பெய்த மழையால் சேறும், சகதியுமாக மாறியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் கூறுகையில், “சாலை பல மாதங்களாக மோசமான நிலையில் உள்ளது. மழை பெய்தால் நடந்து கூட செல்ல முடியாது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் வழுக்கி விழுந்து காயமடையும் அபாயம் உள்ளது. மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைக்க வேண்டும்” என்றனர்.


