கோவை: கோவையில் இருசக்கர வாகன ஓட்டியை கீழே தள்ளிவிட்டு கடித்த குதிரையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
அதிவேகமாக மற்றொரு குதிரையை துரத்திக் கொண்டு சாலையில் அதிவேகமாக சென்ற குதிரை இருசக்கர வாகன ஓட்டிய கீழே தள்ளி கடித்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் சேர்ந்தவர் ஜெயபால். இவர் அப்பகுதியில் தண்ணீர் ஆப்பரேட்டராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை நேரு நகர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென மற்றொரு சாலையில் இருந்து பந்தயத்திற்கு செல்வது போன்று ஒரு குதிரையை துரத்திக் கொண்டு மற்றொரு குதிரை அதிவேகமாக வந்த இரண்டு குதிரைகள் ஜெயபால் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி ஜெயபால் கீழே விழுந்தார். ஆத்திரம் அடைந்த குதிரை ஒன்று அவரை கடித்தது. சுதாரித்துக் கொண்ட அவர் எழுந்ததை பார்த்து குதிரை மீண்டும் அங்கு இருந்து மற்றொரு குதிரையை துரத்தி சென்றது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
மேலும் இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் ஒரு பெண்ணை குழியில் தள்ளிவிட்டு கடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
குதிரை வளர்ப்பவர்கள் சாலையில் விடுவதால் இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவதாகவும், இதனை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


