ஜிடி மேம்பாலம் அருகே நடந்த கார் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

கோவை: கோவை அவிநாசி சாலையில் மேம்பாலம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

கோவை, ஒண்டிப்புதரை சேர்ந்தவர் ஹசன். இவருடைய மகன் ஆரிப் இவர் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ஒரு துணிக் கடையில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஷேக் உசேன் கோவை ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள ஒரு குடோனில் டிரைவராக இருந்தார்.

Advertisement

ஆரிப் வேலை செய்து வரும் துணிக் கடையில் செல்வபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ் மகள் சத்யபிரியா என்பவர் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார். ஒரே கடையில் வேலை செய்து வந்ததால், ஆரிப் மற்றும் சத்தியப் பிரியா ஆகியோர் சகஜமாக பேசி வந்தனர். சத்திய பிரியா கோவையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கோவை, அவிநாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. அதில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இரவு நேரத்தில் பலர் உற்சாக மிகுதியால் மேம்பாலத்தின் மீது சென்ற புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

எனவே சத்யபிரியாவுக்கும் இந்த மேம்பாலத்தின் மீது செல்ல ஆசை ஏற்பட்டது. இது பற்றி ஆரிப்பிடம் கூறினார். ஆரிப்பின் நண்பரான சேக் உசேன் டிரைவராக உள்ளதால், இதுகுறித்து அவர் சேக் உசேனிடம் கூறினார். உடனே அவர் தனக்குத் தெரிந்த நபர் கார் வைத்து உள்ளதால், அவரிடம் இருந்து காரை வாங்கி வருவதாக தெரிவித்தார்.

இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சேக் உசேன் காரை எடுத்து வந்தார். அந்த காரில் ஆரிப் மற்றும் சத்யபிரியா ஆகியோர் ஏற்றி கொண்டனர். காரை சேக் உசேன் ஓட்ட மற்ற இரண்டு பேரும் பின்னால் அமர்ந்து இருந்தனர். பல்வேறு பகுதிகளுக்கு காரில் சுற்றிய, அவர்கள் புதிதாக கட்டப்பட்ட அவிநாசி மேம்பாலத்தில் நேற்று முன்தினம் ஜிடி மேம்பாலத்தின் மீது காரில் சென்றனர். அதிகாலை நேரம் என்பதால் மேம்பாலத்தில் வாகனங்கள் அதிகமாக செல்லவில்லை, இதனால் மூன்று பேரும் காரில் அதிவேகமாக சென்றனர். அந்த கார் 160 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது.

Advertisement

நள்ளிரவு 1:30 மணி அளவில் கோல்ட் வின்ஸ் பகுதியில் கார் மேம்பாலத்தை விட்டு இறங்கி 200 மீட்டர் தூரம் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறு மாறாக சென்றது.

பின்னர் சாலை ஓரத்தில் நின்று இருந்த லாரியின் பின்புறம் அதிவேகமாக பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் கார் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பல பகுதிகளை காணவில்லை, அந்த அளவுக்கு கார் சுக்குநூறாக நொறுங்கி விட்டது. இந்த விபத்துகளில் காருக்குள் இருந்த ஆரிப், சேக் உசேன் மற்றும் சத்யபிரியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து கோவை மாநகரக் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதேபோன்று கோவை தெற்கு மற்றும் பீளமேடு தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் லாரியின் பின்புறத்தில் மோதி உள்ளே சிக்கி இருந்த காரை மீட்டனர்.

அதற்குள் இருந்து ஆரிப், சேக் உசேன், சத்யபிரியா ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த விபத்து குறித்து காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து நடந்த போது அங்கு உள்ள நிறுவனத்தின் ஒன்றில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் அந்தக் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்தக் கார் வேகமாக கட்டுப்பாட்டு இழந்து பயங்கரமான லாரியின் மீது மோதிய காட்சிகள் தற்பொழுது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recent News