உக்கடம் மேம்பாலத்திற்கு புதிய பெயர் சூட்டினார் முதலமைச்சர்!

கோவை: உக்கடம் மேம்பாலத்திற்கு சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கோவையில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரையிலான 3.8 கிமீ தொலைவிற்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.

இதனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து அதில் பயணம் செய்தார். இதனிடையே சமீபத்தில் அவினாசி சாலை மேம்பாலம் திறக்கப்பட்டது. அந்த மேம்பாலத்திற்கு ஜி டி நாயுடு மேம்பாலம் என்ற பெயர் சூட்டப்பட்டது.

மேம்பாலத்தில் எதற்கு ஜாதி அடையாளம் என்ற கேள்வி எழுந்த நிலையில், இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் ஏ.வ.வேலு கூறியிருந்தார்.

இந்த நிலையில், உக்கடம் மேம்பாலத்திற்கு சி.சுப்பிரமணியம் பெயர் சூட்ட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொள்கைகளும் பாதைகளும் வெவ்வேறானாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று நாட்டுக்காகப் பணியாற்றிய தலைவர்களைப் போற்றுவதே மாண்பு.

ஒன்றிய அமைச்சராகப் பொறுப்பு வகித்து, நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்தவர் மதிப்பிற்குரிய பாரத ரத்னா சி.சுப்பிரமணியம் அவர்கள்.

அவரது புகழொளியைப் பரப்பிட வேண்டும் என மதிப்பிற்குரிய டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று பெயர்சூட்டும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.

என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Recent News

Video

Join WhatsApp