கோவை: கோவையில் சிறுவர்கள் ஓட்டிய வாகனம் மோதி வீதியில் விளையாடிக் கொண்டிருந்த அப்பாவிக் குழந்தை படுகாயமடைந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்களுக்கு வாகனங்களை கொடுக்க வேண்டாம் என்று கோவை மாநகர போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மீறு சிறுவர்களுக்கு வாகனம் ஓட்டக்கொடுக்கும் பெற்றோர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே சிறுவர்கள் ஓட்டிய வாகனம் மோதி குழந்தை ஒன்று படுகாயமடைந்த சம்பவம் காண்போரை கதிகலங்க வைத்துள்ளது.
கரும்புக்கடை ஆசாத் நகர் ஐந்தாவது வீதியில் விடுமுறை தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று சிறுவர்கள் அதிவேகமாக வந்துள்ளனர்.
மேலும் வேகத்தை குறைக்காமல் வந்த அந்த பைக், அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது மோதியது. மோதிய வேகத்தில் வாகனத்தை உடனடியாக நிறுத்த முடியாமல், சிறிது தூரம் சென்ற பின்னரே பைக்கை நிறுத்தினர்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த குழந்தைக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. குடியிருப்பு பகுதியில் மூன்று சிறுவர்கள் பந்தய வேகத்தில் இருசக்கர வாகனத்தை இயக்கி வந்ததும், விபத்து ஏற்பட்டதும் அந்த காட்சிகளில் பதிவாகியுள்ளது.
குடியிருப்பு வீதிகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நடமாடும் நிலையில், இதுபோன்று அதிவேகமாக வாகனங்களை இயக்கும் சிறுவர்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்வதை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விபத்தின் வீடியோ காட்சிகள்
பெற்றோர்களே வேண்டாம் விபரீதம்#coimbatore #கோவை #accident #coimbatorenews pic.twitter.com/UPhck4bgnR
— News Clouds Coimbatore (@newscloudscbe) December 31, 2025

