கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வரும் 4.5 ஏக்கர் பரப்பளவிலான மூங்கில் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.
நகரமயமாகி வரும் கோவையை பசுமையாக்க தன்னார்வ அமைப்புகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆங்காங்கே மியாவாக்கி குறுங்காடுகள் அமைக்கப்படுகின்றன.
இதனிடையே மாநகரில் மூங்கில் காடு அமைக்க திட்டமிடப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அதன்படி, SIHS காலனி, வார்டு எண் 55-ல் ரூ.1.48 கோடி மதிப்பில் 4.5 ஏக்கர் பரப்பளவில் மூங்கில் காடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை மாநகர மக்களுக்கு ஆரோக்கியமான பொழுதுபோக்கு மற்றும் மன அமைதியை வழங்கும் நோக்கில் இந்த பசுமை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மூங்கில் பூங்கா
மாநகராட்சி பொது நியில் இருந்து அமைக்கப்பட்டு வரும் இந்த மூங்கில் பூங்கா பணிகளை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இப்பணிகளை நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
என்ன சிறப்பு?
இந்த பூங்காவில் 20-க்கும் மேற்பட்ட மர வகைகள் மற்றும் 25-க்கும் அதிகமான மூங்கில், செடிகள், புதர்கள் நடப்பட உள்ளன.

டெர்மினாலியா அர்ஜுனா, பொங்காமியா பின்னாட்டா, மிமுசோப்ஸ் எலெங்கி, பியூட்டியா மோனோஸ்பெர்மா போன்ற மரங்களுடன், பாம்புசா வல்காரிஸ், பைலோஸ்டாச்சிஸ் ஆரியா போன்ற மூங்கில் வகைகளும் இடம் பெறுகின்றன. சில அலங்கார மற்றும் மூலிகை செடிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.
நடைபாதை முதல் யோகா வரை
பூங்காவில் நடைபாதைகள், அமரும் இடங்கள், குடிநீர் வசதி, கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், யோகா மற்றும் உடற்பயிற்சி செய்ய தனிப்பட்ட இடம், திறந்தவெளி மைதானம் ஆகியவையும் இதில் இடம்பெறுகின்றன.
திருப்பூர் மாதிரி – கோவைக்கு தனி அடையாளம்
திருப்பூரில் உள்ள 12 ஏக்கர் மூங்கில் பூங்காவை மாதிரியாக கொண்டு இந்த பூங்கா வடிவமைக்கப்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஆலோசகர்கள் திருப்பூர் பூங்காவை பார்வையிட்டு, மூங்கில் தோப்பு போன்ற இயற்கை சூழலை கோவையிலும் உருவாக்க பணியாற்றி வருகின்றனர்.
இந்த மூங்கில் பூங்கா நகரில் பசுமையான பூங்காவை உருவாக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ள அதிகாரிகள், இர்து நகரத்தின் அழகை உயர்த்துவதோடு, மன அழுத்தத்தை குறைக்கும் ஓய்விடமாகவும் மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

