கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள டெய்லர் ராஜாவை கர்நாடகா போலீசார் காவலில் எடுத்து அழைத்து சென்றனர். அவரிடம் போலி ஆவணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தது. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கோவையை சேர்ந்த சாதிக் என்கிற டெய்லர் ராஜாவை, கடந்த ஜூலை 9ம் தேதி கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் வைத்து கைது செய்தனர்.
அவரை கோவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து டெய்லர் ராஜாவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
டெய்லர் ராஜா மீது குண்டு வெடிப்பு வழக்கு மட்டுமின்றி 1996ம் ஆண்டு கோவை பெட்ரோல் குண்டு வீசியதில் ஜெயிலர் பூபாலன் உயிரிழந்த வழக்கு, அதே ஆண்டு நாகூரில் சயீதா கொலை வழக்கும், 1997ம் ஆண்டு மதுரையில் சிறை அதிகாரி ஜெயபிரகாஷ் கொலை வழக்கும் அவர் மீது உள்ளது.
போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது டெய்லர் ராஜா கோவை குண்டு வெடிப்பு மற்றும் தன் மீது உள்ள 3 கொலை வழக்கிலும் தனக்கு தொடர்பு இருப்பதாக ஒப்பு கொண்டார்.
இதையடுத்து மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் டெய்லர் ராஜா மீது உள்ள கொலை வழக்கில் ஜூலை 24ம் கோவை மத்திய சிறையில் உள்ள அவரை கைது செய்தனர். அதற்கான ஆணையை சிறை நிர்வாகம் மூலம் போலீசார் வழங்கினர்.
இந்த நிலையில் டெய்லர் ராஜாவை கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கர்நாடகாவில் கைது செய்த போது அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது போலி ஆவணங்கள் மூலம் டெய்லர் ராஜா வாங்கி வைத்திருந்த ஆதார் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் போன்ற பல்வேறு ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
இதுகுறித்து கர்நாடகா மாநிலம் விஜயபுரா போலீசார் டெய்லர் ராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்கு கர்நாடகா போலீசார் டெய்லர் ராஜாவை காவலில் எடுக்க கர்நாடகா கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
மனுவை விசாரித்த கோர்ட் டெய்லர் ராஜாவை காவலில் எடுக்க அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் கர்நாடகா போலீசார் கோவை விரைந்து வந்தனர். தொடர்ந்து காவலில் எடுப்பதற்கான ஆணையை மத்திய சிறை நிர்வாகத்தினரிடம் கொடுத்து டெய்லர் ராஜாவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கர்நாடகா அழைத்து சென்றனர்.
அங்கு டெய்லர் ராஜாவிடம் கர்நாடக போலீசார் போலி ஆவணங்களை தாயார் செய்தது எப்படி?, போலி ஆவணங்கள் தயார் செய்ய உதவியாது யார்? போலி ஆவணங்கள் மூலம் என்ன என்ன பெறப்பட்டுள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


