கோவை: மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த எட்டு வயது சிறுமியின் இல்லத்திற்கு முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
கோவை மாநகராட்சி நகர திட்டமிடல் குழு தலைவரான சந்தோஷ்- சுகன்யா தம்பதியினரின் மகள் வெண்பா (வயது 8). கடந்த 28ஆம் தேதி உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டதன் காரணமாக திடீரென மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து கோவை அவிநாசி சாலையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மூளை சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து மருத்துவர்கள் எடுத்துரைத்த நிலையில் சந்தோஷ் மற்றும் சுகன்யா இருவரும் உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முன் வந்தனர்.

அதன்படி உயிரிழந்த வெண்பாவின் கல்லீரல், சிறுநீரகம், கண்கள், எலும்பு, மற்றும் தோல் ஆகியவை அகற்றப்பட்டு கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் தனியார் மருத்துவமனையில் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மற்றொரு பயனாளிக்கு பொருத்தப்பட்டது.
மற்றொரு சிறுநீரகம், கண்கள், எலும்பு மற்றும் தோல் ஆகியவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் ஏழு பேருக்கு மறுவாழ்வை வெண்பா அளித்துள்ளார்.
இந்நிலையில் கோவைக்கு வருகை புரிந்துள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரடியாக சிறுமியின் இல்லத்திற்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மூளைச்சாவு அடைந்த 8 வயது சிறுமி உடல் உறுப்பு தானம் – கோவையில் முதல்வர் ஆறுதல்

