கோவை: கோவையில் தாறுமாறாக வந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காரை ஓட்டி வந்த நபர் சாலையோரத்தில் குறட்டை விட்டு உறங்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சி ஆழியார் சாலை மணல்மேடு பகுதியில் நேற்று மாலை கார் ஒன்று வேகமாகவும், தாறுமாறாகவும் வந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
எதிர்பாராத நேரத்தில் அந்த கார் திடீரென நிலை தடுமாறி, சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது.
மேலும், சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. தொடர்ந்து காரில் இருந்து வெளியேறிய நபர், தலைக்கேறிய போதையில் அங்கேயே குறட்டை விட்டு படுத்து உறங்கினார்.
இதனைப் பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் கொதிப்படைந்தனர். மேலும், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த கோட்டூர் காவல்துறையினர் சாலையோரம் கவிழ்ந்திருந்த காரை கிரேன் மூலம் மீட்டு கோட்டூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
வீடியோ காட்சிகள்
மேலும் விசாரணை நடத்தியதில், தலைக்கேறிய போதையில் இருந்த நபர் பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடி வலசு பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் என்பதும், இவர் போதையில் காரை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
தாறுமாறாக கார் வந்த நேரத்தில் எதிரே எந்த வாகனமும் வராததால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

