கோவை: கோவையில் செம்மொழி பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா, இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதியளிக்கப்படுவதாக கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதன்படி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
செம்மொழி பூங்கா முதல்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் 208 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் 25 ம் தேதி திறந்து வைத்தார்.
தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து செம்மொழி பூங்காவிற்கு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

இந்த பூங்கா உலகத் தர வசதிகளுடன்
23 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் வகை ரோஜா மலர் தோட்டங்கள், கடையேழு வள்ளல்களின் கொடை சிற்பங்கள்,
அனுபவ மையம்,
தமிழ் வரலாறு சிற்ப காட்சிகள் செயற்கை நீருற்று,
திறந்தவெளி அரங்கு, குழந்தைகள் விளையாட்டு மண்டலங்கள் என ஏராளமான அம்சங்கள் இதில் அடங்கி உள்ளன.
பூங்காவிற்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.15, குழந்தைகளுக்கு (10-வயதிற்குட்பட்டோர்) ரூ.5, நடைபாதை உபயோகிப்போருக்கு ஒரு நபருக்கு மாதாந்திர கட்டணம் ரூ.100, கேமராவிற்கு ரூ.25, வீடியோ கேமராவிற்கு ரூ.50, திரைப்பட ஒளிப்பதிவிற்கு (நாளொன்றிற்கு) ரூ.25,000, குறும்பட ஒளிப்பதிவிற்கு மற்றும் இதர ஒளிப்பதிவிற்கு (நாளொன்றிற்கு) ரூ.2000 கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செம்மொழி பூங்கா செயல்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.



