கோவை: கோவையில் பொது இடங்களில் இருந்து 10 ஆயிரம் தெருநாய்களை அகற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கோவை மாநகரில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், மருத்துவமனைகள், கலெக்டர் அலுவலகம், பள்ளி, கல்லூரிகள் போன்ற பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில் தெருநாய்கள் அச்சுறுத்தல் பல ஆண்டுகளாக தொடந்து வருகிறது.
இந்நிலையில், இவ்விடங்களில் இருந்து குறைந்தது 10 ஆயிரம் தெருநாய்களை அகற்றி பாதுகாப்பு முகாம்களில் வைத்துப் பராமரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.


கோவை மாநகராட்சி ஏற்கெனவே வெள்ளலூரில் சுமார் 1,000 தெரு நாய்கள் பராமரிக்கும் வசதியுடன் ஒரு பாதுகாப்பு முகாமை அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் இந்த பராமரிப்பு பகுதியை மேலும் அதிகரிக்கவும் மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களிலும் தலா 1,000 முதல் 2,000 வரை தெரு நாய்களை பராமரிக்கும் இரண்டு புதிய முகாம்களை அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகரட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாநகரில் சுற்றித்திரியும் 10 ஆயிரம் தெருநாய்களை அகற்றி பாதுகாப்பு முகாம்களில் வைத்துப் பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக கடந்த 15 நாட்களாக பொது இடங்களில் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இரண்டு வாரங்களில் கணக்கெடுப்பு பணி முடிவடையும். அதன் அடிப்படையில் இடம்பெயர்க்கப்பட வேண்டிய தெரு நாய்களின் முழு விவரம் தயாராகும். முகாம்களில் பராமரிப்பு, பணியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கும் ஆட்கள் தயார் செய்யப்பட உள்ளனர்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


