கோவை: கோவை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து கோவை மாவட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள் பிரச்சனையை பேசி உரிய தீர்வு காண வேண்டும் என கோவை மாவட்ட ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள், கோவையிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்குச் சென்ற போது அங்கிருந்த டாக்சி ஓட்டுநர்கள், கோவை டாக்சி ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனைக் கண்டித்து 150-க்கும் மேற்பட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வ.உ.சி மைதானத்திலிருந்து ஊர்வலமாக சென்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவையில் இருந்து பயணிகளை நீலகிரி மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லும் கோவை கால் டாக்ஸி ஓட்டுநர்களை, மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் வாடிக்கையாளர்களை ஏற்றக்கூடாது என நீலகிரியில் உள்ள ஓட்டுநர்கள் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பயணி ஒருவரை கோவையைச் சேர்ந்த குரு பிரசாத் என்பவர் தனது கால் டாக்ஸியில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் வாடகைக்காக காத்திருந்த போது, நீலகிரி டாக்சி ஓட்டுநர்கள் பயணி போல் செயலில் டாக்சி புக் செய்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த குரு பிரசாத் நீலகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கோவை மாவட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டம் ஆட்சியர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.