Coimbatore Crime News: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரைக் கைது செய்த போலீசார் பணத்தை மீட்டுள்ளனர்.
நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் குட்டி, ஆயுர்வேத மருத்துவர். இவருடைய தாயார் வயது 82 கஸ்தூரி, இவர் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். கஸ்தூரி கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஆரிய வைத்திய சாலை நிறுவன குடும்பத்தைச் சார்ந்தவர்.
கஸ்தூரி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருடைய மகள்கள் வீட்டின் அருகே வசித்து வந்தனர். மகன் ராம்குமார் கிளினிக் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வியட்நாம் சென்று இருந்தார். 4 மாதங்களுக்கு முன்பு நேபாள நாட்டைச் சேர்ந்த சுர்ஜா ரோக்கே என்ற 42 வயது பெண்ணை வேலைக்கு சேர்த்தார். அனைவரிடமும் நல்லவர் போல் நாடகமாக ஆடினார்.
கொள்ளை
இந்நிலையில் கஸ்தூரியின் மகன் வெளிநாட்டுக்கு சென்று இருப்பதை வாய்ப்பாக கருதி சுர்ஜா தன்னுடைய கணவர் மற்றும் மேலும் 4 பேரை இரவில் வீட்டுக்குள் வர வழைத்து கஸ்தூரியின் கைகால்களை கட்டி வாயில் துணியை திணித்து மூச்சடைக்க செய்து கொலை செய்தனர். பின்னர் அவர் அணிந்து இருந்த தங்கச் சங்கிலி பீரோவில் இருந்த பணம், நகை ஆகியவற்றை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தெற்கு பகுதி துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் பெங்களூருக்கு சென்று மாரத்தஹள்ளி பகுதியில் பதுங்கி இருந்த ராகேஷ் மற்றும் திலீப் என்பவரை கைது செய்தனர்.
இருவரிடமும் இருந்து கஸ்தூரி வீட்டில் கொள்ளை அடித்த லட்சக் கணக்கான பணத்தை மீட்டனர். இந்த கொலையில் சுர்ஜா ரோக்கே அவருடைய கணவர் உட்பட மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இவர்களும் விரைவில் கைதாவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

