கோவை: கோவையில் பெண் யானை ஒன்று சேற்றில் சிக்கிக்கொண்டு அதில் இருந்து எழ முடியாமல் தவித்து வருகிறது.
மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை வனப்பகுதியில் பெண் யானை ஒன்று சேற்றில் சிக்கிக் கொண்டதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து அங்கு சென்று வனத்துறையினர் அந்த யானையை சேற்றில் இருந்து மீட்டனர்.
தொடர்ந்து அங்கிருந்து சுமார் 1.7 கிலோமீட்டர் தூரம் சென்ற அந்த பெண் யானை, போலாம்பட்டி அருகே உள்ள ஒரு தோட்டத்தில் சேற்றில் சிக்கிக்கொண்டது.
அந்த இடத்தில் அதிகளவில் சேறும் சகதியுமாக உள்ளதால் யானை எழ முடியாமல் தவித்து வருகிறது. இதனை கண்காணித்த வனத்துறையினர், அந்த சேற்றுப்பகுதியில், மண் சரிவுகள் அமைத்து, யானையை மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர்.
இதற்காக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

