கோவை: ஆர். எஸ். புரம் பூ மார்க்கெட்டில் பூ வாங்குவது போல் நடித்து வியாபாரியின் செல்போனை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆர். எஸ் .புரம் அருகே, மேட்டுப்பாளையம் சாலையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராளமான பூக்கடைகள் உள்ளன.
இங்கு தினமும் காலையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பூக்களை வியாபாரிகளிடமிருந்து வாங்கிச் செல்வது வழக்கம். இதனால் எப்போதும் பூ மார்க்கெட்டில் அதிகளவில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
இந்த நிலையில் நேற்று காலை அங்கு உள்ள பூக்கடையில் லங்கா கார்னரை சேர்ந்த விஜயன் (வயது 47) என்பவர் மும்முறமாக பூக்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது கடைக்கு ஒருவர் வந்து பூ வேண்டும் என்று கூறி விலை கேட்டுள்ளார். விஜயன் வியாபாரம் செய்து கொண்டே அவரிடம் பூக்களை விலையை கூறிக்கொண்டிருந்தார்.
அப்போது விஜயன் கடை மேசையில் வைத்திருந்த செல்போனை அந்த நபர் திடீரென்று எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.
அப்போது விஜயன் மற்றும் அங்கு இருந்த வியாபாரிகள் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். பிறகு அவரை ஆர்.எஸ்.புரம் காவக் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அவரது பெயர் அப்துல் ரஷீத் (வயது 41) என்பதும், அவர் போத்தனூர் சாகிப் தெருவைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
தொடர்ந்து செல்போனை கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

