கோவை: கோவையில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து அதிமுக மற்றும் தவெக கட்சிகள் ஒரு மணி நேர இடைவெளியில் தனித்தனியே ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளன.
கோவையில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், பல்வேறு கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இன்று கோவை பாஜக சார்பில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதனிடையே நாளை மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில்,
“கோவையில் கல்லூரி மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும்; தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிர் அணியின் சார்பில் கோவை, செஞ்சிலுவை சங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (4.11.2025) செவ்வாய்க் கிழமை காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.” என்று அதிமுக அறிவித்துள்ளது.
இதேபோல், விஜய்யின் தவெக-வும் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
“தமிழ்நாடே தலைகுனியும் அளவிற்கு, கோவையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி, தவெக சார்பில் செஞ்சிலுவை சங்கம் சந்திப்பில் 12 மணி முதல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தவெக அறிவித்துள்ளது.
இரு கட்சிகளும் ஒரு மணி நேர இடைவெளியில் ஆர்ப்பாட்டங்கள் அறிவித்துள்ள நிலையில், நாளை அவினாசி சாலை, ரேஸ்கோர்ஸ், ரயில்நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. பத்திரமா இருங்க.
Coimbatore girl student issue: AIADMK, TVK announced protest
AIADMK and TVK protests announced in Coimbatore over student assault case


                                    
