கோவை ஜல்லிக்கட்டு: கோவையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான முதல் அழைப்பிதழ் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கலை ஒட்டி பல்வேறு மாவட்டங்களிலும் நடைபெற்றது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே 3 ஆண்டுகளுக்குப் பின் கோவையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
கோவையில் வரும் 27ம் தேதி எல்&டி பைபாஸ் செட்டிபாளையம் அருகே ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டியை, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்.
தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவையின் கோவை மாவட்ட தலைவரும் தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளருமான தளபதி முருகேசன், துணைத்தலைவர் விஸ்வநாதன், பேரவை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேரில் சென்று, கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முதல் அழைப்பிதழை வழங்கினர்.

கோவையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 800க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட காளையர்கள் இப்போட்டியில் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் வெற்றி பெறுவோருக்குத் தங்கக் காசு, வெள்ளிக் காசு, உள்ளிட்டு ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், பார்வையாளர்கள் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியைக் காணும் வகையில் கேலரிகள் அமைக்கப்பட உள்ளன.