கோவை மக்களின் ஷாப்பிங் ஸ்பாட் ஆன காய்கறி சந்தை, மொபைல் போன், வாகனங்கள், புத்தகங்கள் உள்ளிட்ட A to Z அனைத்துமே குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் மார்க்கெட்டுகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
ஷாப்பிங் செய்ய வேண்டும், ஆனால் விலை மலிவாக இருக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அந்த வகையில், மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் குறைந்த விலையில், அதுவும் தரமானதாக கிடைத்துவிட்டால் அலாதியான மகிழ்ச்சி தான்.
கோவையில் உள்ள மக்களுக்கு பின்வரும் இடங்கள் பரிச்சயமான இடங்களாக இருந்தாலும், வெளியூர் மக்களுக்கும், கோவையின் சந்தைகள் குறித்து அறிந்திராத மக்களுக்கும் இந்த செய்தி உதவியாக இருக்கலாம்.
Table of Contents
பூ மார்க்கெட்

ஆர்.எஸ்.புரம் அருகே மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ளது கோவையின் பூ மார்க்கெட். கோவை மட்டுமல்லாது சுற்றுவட்டார மாவட்டங்களும், கேரள மக்களும் இங்கு வந்து பூக்களை வாங்கிச் செல்வது வழக்கம்.
இங்கு மல்லிகை, முல்லை, ரோஜா, சாமந்தி, தாமரை, செவ்வந்தி, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் தினமும் அதிகாலை சுமார் 3 மணி முதல் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பார்க்கிங் பிரச்சனை இங்கு பெரிய சிக்கலாக உள்ளது. காரில் சென்றால் கொஞ்சம் சிரமம் தான்.
முகூர்த்த மற்றும் பண்டிகை நாட்களில் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். மொத்த மற்றும் சில்லறை விற்பனை என இரு வகையிலும் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
100-க்கும் மேற்பட்ட பூக்கடைகள் மற்றும் பூ அலங்காரப் பொருட்கள் கடைகள் இங்கு செயல்பட்டு வருகின்றன.
காந்திபுரம் செல்போன் மார்க்கெட்

குறைவான விலையில் மொபைல் வாங்க தேடிக்கொண்டிருக்கிறீர்களா? மொபைல் ஸ்பேர் பாகங்கள் வேண்டுமா? அப்படியானால் காந்திபுரம் சரியான இடம்.
காந்திபுரத்தில் பூர்விகா மொபைல்ஸ், சேரா ஹோம் ஜங்ஷன், Supreme Mobiles, Mobile Magic மற்றும் Samsung Smart Cafe உள்ளிட்ட பல முன்னணி மொபைல் விற்பனை மற்றும் சேவை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர 100 அடி சாலையின் அனைத்து குறுக்கு வீதிகளிலும் மொபைல் கடைகள் உள்ளன.
இங்கு புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட (Second-hand) மொபைல்கள், சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்கள் குறைந்த விலையில் கிடைக்கும். அருகில் மாநகராட்சி பார்க்கிங் இருப்பதால் காரிலும் செல்ல வசதி உள்ளது.
உக்கடம் பழைய மார்க்கெட்

இன்றைய காலகட்டத்தில் பைக்குகள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். புதிய மற்றும் பழைய பைக்குகள், ஸ்கூட்டர்கள் மற்றும் கார்களுக்கு ஸ்பேர் பாகங்கள் குறைந்த விலையில் வாங்க வேண்டுமென்றால் உக்கடம் சிறந்த இடம்.
பஸ் ஸ்டாண்டுக்கு எதிரில் சில மீட்டர் தூரம் நடந்தால் இந்த பழைய மார்க்கெட்டை அடையலாம். கடல் போல் குவிந்து கிடைக்கும் ஸ்பேர் பாகங்களை பேரம் பேசி வாங்கலாம். விலை மிகவும் குறைவாக கிடைக்கும்.
குறிப்பாக பைக் ஆக்சஸரீஸ் மற்றும் உதிரி பாகங்கள் 10 ரூபாயில் இருந்தே கிடைக்கும்.
உக்கடம் புத்தக மார்க்கெட்

வசதி இல்லாதவர்கள் முதல் நடுத்தர மக்கள் வரை புத்தக கடைகளை நாடாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அறிவு சார்ந்த புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், வளர்ச்சி மற்றும் தொழில் ரீதியான புத்தகங்கள், மனோதத்துவ புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள் போன்றவை இங்கு மலிவான விலையில் கிடைக்கும்.
புதிய புத்தகங்களை வாங்க முடியாதவர்கள் பழைய புத்தக கடைகளில் மிகவும் குறைந்த விலையில் புத்தகங்களை வாங்கி படித்து மகிழ்கிறார்கள். ஏழை, எளியவர்களின் சுமையை குறைத்து அவர்கள் விரும்பிய புத்தகங்களை வாங்க வழிவகுக்கும் இடமாக உக்கடம் பழைய புத்தக மார்க்கெட் திகழ்கிறது.
கோவையில் உள்ள உக்கடம் பகுதியில் பழைய மற்றும் புதிய புத்தகங்களுக்கு புகழ்பெற்ற பல கடைகள் உள்ளன. குறிப்பாக, வின்சென்ட் சாலை மற்றும் உக்கடம் பேருந்து நிலையம் அருகில் இவை அமைந்துள்ளன.
பள்ளி, கல்லூரி பாடப்புத்தகங்கள், போட்டித் தேர்வு புத்தகங்கள் மற்றும் நாவல்கள் மலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இடமாகும்.
Universal Books, Ukkadam Book Shop, Majestic Book House போன்றவை பிரபலமான கடைகள். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட புத்தகங்களை இங்கு பாதி விலையில் வாங்கலாம்.
உக்கடம் மீன் மார்க்கெட்

கோவையில் மீன் வாங்குவதற்கு மிகச்சிறந்த இடம் உக்கடம் மீன் மார்க்கெட். இங்கு மொத்த மற்றும் சில்லறை விலையில் கடல், டேம் மற்றும் குளத்து மீன்கள் கிடைக்கின்றன.
கேரளா, ராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதிகளில் இருந்து தினசரி புதிய மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. பொதுமக்கள் அதிகாலை முதலே குவிந்து மீன் வாங்கிச் செல்கின்றனர்.
உக்கடம் லாரிப்பேட்டை மொத்த மார்க்கெட்டில் மீன் வாங்க வேண்டுமெனில் காலை 8 மணிக்குள் செல்வது நல்லது. இங்கு மீன்கள் மலிவு விலையில் கிடைக்கும்.
பஸ் ஸ்டாண்டுக்கு நேர் எதிரில், பேரூர் பைபாஸ் பகுதியில் சில்லறை மார்க்கெட்டும் உள்ளது. அங்கு முழு நாளும் மீன்கள் விற்பனை நடைபெறும்.
எம்ஜிஆர் காய்கறி மொத்த மார்க்கெட்

கோவையில் மளிகைக் கடைகளை வைத்திருக்கும் வியாபாரிகள் இந்த காய்கறி மொத்த மார்க்கெட்டில் தான் காய்கறிகளை வாங்குகின்றனர்.
சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் காய்கறி மொத்த மார்க்கெட்டில் (MGR Vegetable Market) 150-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இது கோவையின் முக்கிய காய்கறி மார்க்கெட்டாகும். தினமும் அதிகாலையிலேயே இந்த மார்க்கெட் பரபரப்பாகிவிடும். கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு காய்கறிகள் விநியோகம் செய்யப்படும் முக்கிய மையமாக இது திகழ்கிறது.
அண்ணா தினசரி சந்தை

சாய்பாபா காலனியில் அமைந்துள்ள அண்ணா தினசரி சந்தையும் கோவையின் முக்கிய காய்கறி மார்க்கெட்டாகும்.
டவுன்ஹால் – துணி மார்க்கெட்

மலிவு விலையில் தரமான துணிகள் வேண்டுமென்றால் டவுன்ஹால் சிறந்த இடம். உப்புக்கிணறு சந்தில் நுழைந்தால் வெளியில் ரூ.500க்கு விற்கப்படும் துணிகள் பாதி விலையில் கிடைக்கும். இங்கு தங்க மற்றும் கவரிங் நகைக்கடைகளும் உள்ளன.
தாமஸ் வீதி – பொம்மைகள்

பொம்மை வாங்க வேண்டுமென்றால் டவுன்ஹாலில் உள்ள தாமஸ் வீதி செல்லலாம். ஏராளமான மொத்த மற்றும் சில்லறை பொம்மை விற்பனை நிலையங்கள் உள்ளன. பேன்சி கடை வியாபாரிகளும் இங்கிருந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
முன்புற கடைகளில் விலை சற்று அதிகமாக இருக்கும். உள்ளே சென்று கடைகளை ஒப்பிட்டு வாங்கலாம்.
பூரா மார்க்கெட்

டவுன்ஹாலில் போத்தீஸ் கடைக்கு எதிரே அமைந்துள்ளது பூரா மார்க்கெட். கவரிங் நகைகள், அலங்கார மற்றும் பேன்சி பொருட்களை மலிவு விலையில் வாங்க இங்கு செல்லலாம்.
மளிகை மற்றும் பழங்கள்
வீட்டிற்குத் தேவையான மளிகை மற்றும் பழங்களை வாங்க டவுன்ஹாலில் இருந்து டிகே மார்க்கெட் செல்லலாம். அருகிலுள்ள ரங்கே கவுடர் வீதியில் மொத்த மளிகை கடைகள் அதிகம் உள்ளன.

ஒவ்வொரு கடையிலும் விலைப்பட்டியலை கேட்டுப் பார்த்து, விலை மற்றும் தரத்தை ஒப்பிட்டு பொருட்கள் வாங்கலாம்.
கோவையில் உள்ள முக்கிய மார்க்கெட்டுகளை இங்கு பட்டியலிட்டுள்ளோம். உங்களுக்கு தெரிந்த மற்ற மார்க்கெட்டுகளை கருத்துகளில் பகிர்ந்தால், இந்த செய்தியைப் படிக்கும் வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.


தியாகி குமரன் மார்க்கெட், ராஜவீதி , பெரிய கடை வீதி, சின்னங்களை வீதி லிஸ்டில் சேர்க்கப்பட வேண்டும்.
சின்ன கடைவீதி (சின்னங்களை)